Pages

france

Thursday, December 30, 2010

துணைஇராணுவக் குழுக்களை பயன்படுத்தி சிறீலங்கா அரசே படுகொலைகளில் ஈடுபட்டது: அமெரிக்கா

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சிறீலங்கா அரசு துணை இராணுவக்குழுக்களான ஈ.பி.டி.பி, பிள்ளையான் குழு உட்பட பல குழுக்களை பயன்படுத்தி படுகொலைகளில் ஈடுபட்டுவந்ததை விக்கிலீக்ஸ் இணையத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்காவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் 2007 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தகவலில், சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா இந்த கொலைக் கும்பலை பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கைகளில் மட்டுமல்லாது, கொழும்பின் பாதுகாப்புக்கும் மகிந்தா இந்த குழுக்களை பயன்படுத்தி வந்துள்ளார். கொழும்பில் தங்கியிருப்பவர்களில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்கள் என கருதப்படுபவர்களை இந்த குழுக்களே கடத்தி படுகொலை செய்துள்ளன.

சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கையால் கொழும்பு நகரம் கடும் பதற்றத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்தது. துணைஇராணுவக்குழுக்களின் நடவடிக்கைகளில் தலையிடவேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா யாழ் மாவட்ட கட்டளைத்தளபதிக்கு உத்தரவிட்டிருந்தார்.

துணை இராணுவக்குழுவினரே பெருமளவான நீதிக்குப் புறம்பான படுகொலைகளை மேற்கொண்டிருந்தனர். துணை இராணுவக்குழுக்களுடன் இணைந்து செயற்பட்ட இராணுவப் புலனாய்வுப்பிரிவினரின் நடவடிக்கைகளிலும் தலையிடவேண்டாம் என இராணுவ உயர் அதிகாரிகள் பணிக்கப்பட்டிருந்தனர்.

டக்களஸ் தேவானந்தாவின் உதவியுடன் கருணாவே 2005 ஆம் ஆண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்திருந்தார். மகிந்தா ராஜபக்சா பதவியேற்ற பின்னர் ஒரு வாரத்தில் இது மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதே குழுவினரே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் என்பவரையும் படுகொலை செய்திருந்தனர்.
 
தமிழ் வர்த்தகர்களை பயமுறுத்தி பணத்தை சேகரிக்கும்படி கோத்தபாயாவே ஈ.பி.டி.பி மற்றும் கருணா குழுக்களை பணித்திருந்தார் என றொபேட் ஓ பிளேக் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment