Pages

france

Wednesday, November 3, 2010

தமிழீழ அரசுடன் தலைநிமிர்ந்து செல்!

கண்ணைக் கட்டி காட்டிலிட்டு காலடி மண்பறித்தார்
எண்ணச் சொல்லி சிறையினிலிட்டு இடத்தைக் கொள்ளுகிறார்
உண்ணச் சொல்லி நஞ்சைத் தொட்டு உதட்டில் பூசுகிறார்
அண்ணன்தானே அன்பாய்வாழென் றகிலம் சொல்லுதடா

பெண்ணைக் கொண்டு பிள்ளைகள்கொன்று பேயாய் ஆடுகையில்
மண்ணைக் கண்டு மௌனம் என்று மடமை கொள்ளுவதோ
விண்ணைக் கிழித்து வேகம் கொண்டு விரைந்த கதிரவனும்
உண்மை ஒளிர்ந்து உலகம் காண ஊன்றிநீ உழைக்காயோ
ஆடிய காலும் அமைதியென்றாகி ஆறிடும் மைந்தர்களே
தேடியஎண்ணம் சீர்பெறமுன்னே வேர் என ஆனவரே
வாடிய நாமும் வாழ்ந்திட இன்னும் விடுதலை கைகளிலே
கூடிடவில்லை கோவில் நம்ஈழம் கூத்திடும் பேய்கையிலே

வானில் ஒளிர்ந்தே சூரியன் நின்றான் வந்தோர் இருள்முகிலோ
தானிலை கொண்டு தரணிமறைத்து தமிழும்அழித்ததடா!
ஏனிலை கெட்டு இதயமும்வாடி இறுகினர் மாந்தரிவர்
சூனியமில்லை சுடரெனும் ஆதவன்தேய்ந்து சிறுப்பதில்லை

மூடிய மேகமும் ஓடியபோது முன்னிலை கொண்டிடுமே
தேடி எழுந்தால் பகைமையும்  இலவம் பஞ்சென பறந்திடுமே
வாடியகண்ணும் மூடிய இருளும் வாழ்வில் நிலைத்திடுமா
ஓடி நடந்திடு உயர்தமிழ் ஈழம் ஏற்றிட உழைத்துவிடு

நாடு கடந்த ஈழப்பெரும் அர சாட்சியும் எழுகின்றது
தேடும் வழிசரி நேரென ஆகிட தீரமுடன்  நடந்து
கூடுஇழந்தொரு கோவிலெனும் நிலவீடுகளில் உறங்கும்
வாடுமலர்களின் வல்லமனம்கொண்ட  தாகம்நீ தீர்த்துவிடு

கிரிகாசன்

No comments:

Post a Comment