Pages

france

Tuesday, November 9, 2010

ஆறு நாட்களில் அகதிகளுடன் ஏழு படகுகள் - கிறிஸ்மஸ்தீவு முகாம் நிரம்பி வழிகிறது

சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் 81 படகு அகதிகள் நேற்றுமுன்தினம் காலை கிறிஸ்மஸ் தீவு அருகே அவுஸ்ரேலியக் கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளனர்.
கிறிஸ்மஸ் தீவுக்கு எட்டு கடல் மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் படகில் 81 அகதிகள் மட்டுமே இருந்தனர். படகில் மாலுமிகள் எவரும் இருக்கவில்லை.

இந்தப் படகில் மாலுமிகள் இல்லாததால் ஆட்கடத்தல் வர்த்தகம் தொடர்பான முக்கியமான கேள்விகள் எழுந்துள்ளதாக அவுஸ்ரேலியாவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புப் பேச்சாளர் மைக்கல் கீனன் தெரிவித்துள்ளார்.
ஆட்கடத்தில்களில் ஈடுபடுபவர்கள் இரகசியமான வலைப்பின்னல் ஒன்றை வைத்திருப்பதுடன் புதிய புதிய தந்திரோபாயங்களையும் வெளிபடுத்த ஆரம்பித்துள்ளனர்.

மாலுமிகள் எவரும் இல்லாமல் அகதிகள் படகு எப்படி அவுஸ்ரேலியா வந்தது என்ற கேள்விக்குப் பதில் தேட வேண்டியுள்ளது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்தப் படகில் வந்தவர்கள் பெரும்பாலும் சிறிலங்காவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதேவேளை, அவர்களுடன் சேர்த்து கிறிஸ்மஸ் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகளின் எண்ணிக்கை 2998 ஆக அதிகரித்துள்ளது.
கிறிஸ்மஸ்தீவு தடுப்புமுகாமில் 2500பேரைத் தடுத்து வைப்பதற்கான வசதிகளே இருக்கின்றன.
இந்தப் படகில் வந்தவர்களுக்கு கிறிஸ்மஸ் தீவு முகாமில் உடல்நலம், பாதுகாப்பு, அடையாளப் பரிசோதனைகள் மேறகொள்ளப்படவுள்ளன.
அதேவேளை, கடந்த வியாழக்கிழமை இரண்டு குழுந்தைகள் உள்ளிட்ட 180 பேருடன் ஒரு படகு கிறஸ்மஸ்தீவுக்கு வந்தது.
அதற்கு முன்னர் 24 மணிநேரத்தில் நான்கு அகதிகள் படகுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த செவ்வாய், புதன் ஆகிய தினங்களை உள்ளடக்கிய 24 மணிநேரத்திலேயே இந்த நான்கு அகதிகள் படகுகளும் வழிமறிக்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு படகுகளிலும் மொத்தம் 225 அகதிகள் இருந்தனர்.
இதையடுத்து இந்த வருடம் அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்துள்ள படகு அகதிகளின் எண்ணிக்கை 5547ஆக அதிகரித்துள்ளது.

2004ம் ஆண்டிலேயே அதிகளவிலான படகு அகதிகள் அவுஸ்ரேலியா வந்திருந்தனர். அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ்தீவில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியை அடுத்து அங்குள்ள அகதிகளில் ஒரு பகுதியினரை பிரதான நிலப்பரப்பில் உள்ள முகாம்களுக்கு மாற்றும் முயற்சியில் அவுஸ்ரேலிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே நேற்றுமுன்தினம் இரவு இரண்டு அகதிகள் மற்றும் ஒரு மாலுமியுடன் மற்றொரு படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த ஆறு நாட்களில் அகதிகளுடன் ஏழு படகுகள் அவுஸ்ரேலியாவை வந்தடைந்துள்ளதாக சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார்.

இதனிடையே அவுஸ்ரேலிய அரசாங்கம் அகதிகளின் வருகையைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டதாகவும், இது ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
படகு அகதிகளின் வருகையைக் கட்டுப்படுத்த அவுஸ்ரேலிய அரசு இறுக்கமான குடிவரவுக் கொள்கையை அறிமுகப்படுத்தியிருந்த போதிலும் அகதிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளதால் அவுஸ்ரேலிய அரசு கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

அவுஸ்ரேலியாவின் புதிய குடிவரவுக் கொள்கை தோல்வியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்ட ஆரம்பித்துள்ளன.
இதற்கிடையே கடந்த 3ம் திகதி அவுஸ்ரேலியாவின் பிரதான நிலப்பரப்பு தடுப்பு முகாமில் இருந்த 25 படகு அகதிகளுக்கு நுழைவு அனுமதியும் குடியேறும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த ஆண்டு நுழைவு அனுமதி வழங்கப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை 1812 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 1003 பேரும், சிறிலங்காவைச் சேர்ந்த 357 பேரும், 165 ஈரானியர்களும், 81 ஈராக்கியர்களும், ஏனைய நாடுகளைச் சேர்ந்த 21பேரும் அடங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment