விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பது தொடர்பாக நீதிபதி விக்ரம்ஜித் தலைமையிலான தீர்ப்பாயம் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது. டெல்லி, சென்னை, ஊட்டி என பல்வேறு இடங்களில் நடந்த இந்தக் கூட்டங்களில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் கலந்து கொண்டு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்கக் கூடாது என வாதிட்டனர்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாதிட முடியும் என்று விக்ரம்ஜித் கூறியிருந்தார். இதையடுத்து, கடந்த வாரம் சென் னையில் நடைபெற்ற தீர்ப்பாயக் கூட்டத்தில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் விஜயரத்தினம் சிவநேசன் வழக்கறிஞர் ராதாகிரு ஷ்ணன் மூலம் தீர்ப்பாயத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்கக் கூடாது எனவும், அரசுத் தரப்பை தான் விசாரிக்க வேண்டும் என்று கோரி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, தீர்ப்பாயம் முன்பு ஆஜரான சுப்பிரமணியன் சுவாமியும் வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோருக்கு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வாதாடும் வாய்ப்பை வழங்கினால், அதற்கு எதிராக வாதாடும் வாய்ப்பை தனக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த 1,2 தேதிகளில் தீர்ப்பாயத்தின் கூட்டம் டெல்லியில் நடந்தது. தீர்ப்பாயத்தில் மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் ஏ.எஸ்.சாந்தி ஹுக் வாதிட்டார். விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீட்டிப்பது தொடர்பாக ரகசிய ஆவணம் ஒன்று மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பார்த்த நீதிபதி, ‘‘இது எப்படி ரகசிய ஆவணமாக முடியும்? தாக்கல் செய்தவர் பெயர் உள்பட இந்த ஆவணத்தில் யார் பெயரும் இல்லை. இந்த ஆவணத்தை யார் கொடுத்தார்கள் என்ற தகவலையும் அரசுத் தரப்பில் தெரிவிக்கவில்லை.
ஒரு ஜனநாயக நாட்டில் விதிவிலக்கான விஷயங்களை மட்டுமே ரகசியம் என்று கருதப்பட வேண்டும். எனவே, இந்த ஆவணத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வே ண்டும்’’ என்று கூறி அந்த ஆவணத்தை நிராகரித்தார்.
தொடர்ந்து வைகோ தனது வாதத்தில், ‘‘விடுதலைப் புலிகள் இந்தியாவின் சில பகுதிகளையும் ஆக்கிரமிக்க திட்டமிட்டிருந்தார்கள் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. தமிழ் ஈழம் என்பது இந்தியாவின் எந்தப் பகுதியும் இணைந்தது அல்ல. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை மட்டுமே தமிழ் ஈழம் என்று கருத இயலும்.
கடந்த ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் கைப்பற்றவோ, ஆக்கிரமிக்கவோ முயற்சி எடுத்தது கிடையாது. அதுதொடர்பான ஆவணங்களையோ, சாட்சிகளையோ அரசுத் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், இந்தியாவில் விடுதலைப் புலிகளை தடைசெய்வது தவறு’’ என்று குறிப்பி ட்ட வைகோ, விடுதலைப் புலிகள் தொடர்பாக நியூசிலாந்து நாட்டு உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பினையும் வாதத்தில் குறிப்பிட்டார்.
‘‘நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் ‘புலிகள் இயக்கம் தங்களுடைய சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் ஒரு இயக்கம் என்றும், வடக்கு கிழக்கு தமிழருக்காக ஒரு நாட்டை அமைப்பதற்குப் போராடும் இயக்கம்’ என்றும் கூறியிருக்கிறது. எனவே, இலங்கைக்குள் அவர்கள் நடத்தும் போராட்டத்திற்காக இந்தியாவில் தடை யை நீட் டிப்பது சரியாகாது’’ என்று வாதிட்டார்.
பழ.நெடுமாறன் சார்பாக வழக்கறிஞர் சந்திரசேகர் தனது வாதத்தில், ‘‘இந்திய சட்டத்தின் படி சாட்சிகள் காவல்துறை முன் அளிக்கும் வாக்குமூலங்களை நீதிமன்றம் ஏற்கக் கூடாது. ஆனால் இந்த வழக்கில் காவல்துறை முன் கொடுத்த வாக்குமூலங்களைத் தவிர வேறு எந்த ஆவணத்தையும் மத்திய அரசோ, மாநில அரசோ தீர்ப்பாயம் முன் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. அதனால் காவல்துறை முன் அளிக்கப்பட்ட வாக்குமூலங்களை தீர்ப்பாயம் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
மாவோயிஸ்டுகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை அரசுத் தரப்பில் ஆதாரங்களாக தீர்ப்பாயத்திடம் சமர்ப்பி த்திருந்தார்கள். உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் ‘வேறு எந்த ஆவணங்களும் இல்லையென்ற சூழ்நிலையில் மட்டுமே பத்திரிகை செய்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று தீர்ப்பளித்திருக்கிறது’’ என்று வாதிட்டார்.
விஜயரத்தினம் சிவநேசன் சார்பாக வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாதிடுகையில், ‘‘புலிகள் இயக்கம் இந்தியாவில் ஒரு பகுதியை இணைக்க முயற்சி செய்வதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. அது உண்மையென்றால், அந்த இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் ஒருவர் மரணமடைந்த போது, தமிழக முதல்வர் கருணாநிதி அவரை மாவீரன் என்று புகழ்ந்து எழுதுவாரா?’’ என்று கேள்வி எழுப்பினார். கூடவே இந்தியப் பகுதிகளை விடுதலைப் புலிகள் இணைப்பது தொடர்பாக வைகோவின் வாத த்தோடு முழுவதும் உடன்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ‘‘இந்தியாவில் எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஈடுபட்டது என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. அரசுத் தரப்பும் இதை சமர்ப்பிக்கத் தவறிய நிலையில், விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீட்டிப்பது நியாயமற்றது. வெறும் பேச்சுக்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு தருவதாகாது என்று பலமுறை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ளது. எனவே, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் தடையை நீட்டிப்பது சட்ட விரோதமானது. இந்தத் தடையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று தீர்ப்பாயம் முன்பு தனது வாதத்தை வைத்தார்.
சுப்பிரமணியன் சுவாமி சார்பில் அவரது வழக்கறிஞர், சு.சுவாமியின் எழுத்துபூர்வமான வாதத்தை தீர்ப்பாயம் முன் சமர்ப்பிக்க அனுமதி கேட்டார். சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த வழக்கறிஞர் சந்திரசேகர், ‘‘ராஜிவ் கொலை வழக்கில் சுப்பிரமணியன் சுவாமியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது’’ என்று கூறினார். வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
‘‘சுப்பிரமணியன் சுவாமி நேற்றும் தீர்ப்பாயத்தின் முன் ஆஜராகவில்லை, இன்றும் ஆஜராகாத நிலையில் இந்த வாதத்தை அனுமதிக்க முடியாது’’ என்று கூறி கோரிக்கையை நிராகரித்தார்.
இதையடுத்து நவம்பர் 14-ம் தேதி விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதா, வேண்டாமா? என்கிற தனது தீர்ப்பை விக்ரம்ஜித் வழங்கவிருக்கிறார்.
- குமுதம் ரிப்போட்டர்
No comments:
Post a Comment