Pages

france

Wednesday, November 10, 2010

மதமும் மனிதஉரிமை மீறலும் - அரிமா - 2


சென்ற கட்டுரையின் தொடர்ச்சி....

''மதம் என்பது , இம்மை , மறுமை , கடவுள் என்னும் மூன்றையும் பற்றி , ஒருவன் மதித்துக்கொள்ளும் கருத்தேயன்றி வேறன்று '' (1) என்கிறார் பாவாணர் . '' பலர் தீய ஒழுக்கத்தை விட்டு நல்ல ஒழுக்கத்தை மேற்கொண்டிருந்ததற்கும் மறுமையில் இறைவன் எரி நரகிலிட்டு தண்டிப்பான் எனும் அச்சமே கரணியமாகும் . பண்பாடின்றி மக்கள் முன்னேற முடியாது. ஆதலால் , மதம் மக்கள் முன்னேற்றத்திற்கு அடிபடையாகும் '' என்று தொடருகிறார் பாவாணர் . ( 2 ) பாவாணர் மேலோட்டமாக இப்படிச் சொல்லிச் செல்கிறார் . ஆனால் , ''சமயத்தையும் மதத்தையும் நுட்பமாக வேறுபடுத்திய மரபு தமிழருக்குண்டு''. ( 3 ) இயற்கை , அதற்கு புறம்பான புற ஆற்றல்கள் பற்றிய இறையியல் விளக்கம் , மக்களின் அன்றாட வாழ்க்கை வழிமுறைகளையும் , வழிபாட்டு முறைமைகளையும் இணைத்திடும் ஒரு கருத்தியலே சமயம் . அக்கருத்தியலை அல்லது கோட்பாட்டை தற்காத்துகொள்ளும் அமைப்பியல் கட்டுமானமே மதம் என தெளிவு படுத்துகிறார் குணா . ( 4 ) ஆக , பாவாணர் மேலோட்டமாக மதம் என்று குறிப்பிடுவது உண்மையில் சமயத்தையே குறிக்கும் .

கருத்தியல் எல்லோருக்கும் பொதுவானதாக அல்லது ஒன்றாக இருக்கமுடியாது . சமயம் என்பது குமுக , அரசியல் சூழலை உள்வாங்கி வெளிபடுத்தும் கருத்தியல் என்றால் , அது பல்வேறு சூழலுக்கு தகுந்தாற்போல் மாறுவதும் , வேறுபடுவதும் இயற்கையே . முகமது நபியின் சமயம் இயேசுவின் கோட்பாடுகளுக்கு வேறுபட்டது. வானில் வேர்கள் தோன்றாது. மண்ணிலேய அவை வளரும் . இயேசு வாழ்ந்த சூழலில்தான் அவர் கொண்ட கருத்தியல் விளைந்தது . பல எதார்த்தங்களோடு ஏற்பட்ட உராய்வினாலும் பட்டறிவாலுமே அது உருவாகி இருக்ககூடும் . கருத்தியலை காப்பாற்ற அமைப்பியல் வளர்ந்தது. திருச்சவை உருவானது. பின்பு அக்கருத்தியல் பல தேசங்களுக்கு பரவியபோது அந்தந்த சூழலுக்கேற்ப அக்கருத்தியல் பொலிவு பெற்று வளர்ந்திருக்கவேண்டும் . ஆனால் கருத்தைவிட அமைப்பே அழுத்தம் பெற ஆரம்பித்தது. யூத மதத்தின் இருக்கதிற்கெதிராக உரோமை வல்லாட்சியலர்களுக்கு எதிராக உருவெடுத்த கிறித்துவ கருத்தியல் , ஒடுக்கப்பட்ட யூத இனத்தின் விடுதலையை கனவு கண்டது. இன்று பல இடங்களில் ஒடுக்குகிறவர்களின் சார்பாகவே கிறித்துவம் திசை மாறி கிடக்கிறது.

தமிழகத்தில் செயல்பட்டுவரும் உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் , வடபகுதியில் செயல்பட்டு வந்த மண்ணின் மைந்தர் இயக்கம், தொல் தமிழ் ( தலித் ) கிறித்துவர் விடுதலை இயக்கம் , தமிழ் இறையியல் மன்றம் போன்ற அமைப்புகளும் இயக்கங்களும் தமிழ் மண்ணில் கிறித்துவ கருத்தியலுக்கு உண்மையான உரு கொடுக்க அரும்பாடு பட்டு வருகின்றன . ஆனால் கிறித்துவ அமைப்பியலை கட்டிபாதுகாக்கும் பொறுப்பை தங்கள் சிரமேற்கொண்டு அலையும் ஆதிக்க திருச்சவை , அடக்குவதும், எதிர்பதுமாய் செயல்பட்டு வந்திருக்கின்றன . ( ஆதிக்க திருச்சவை என்று நாம் குறிப்பிடும்போது ஆயர்கள் என்று மட்டும் கணக்கில் எடுக்ககூடாது . 'கனமான' பொதுநிலையினர் , துறவற சபையின் தலைமைகள் , திருச்சவையின் பல ஏடுகள் , என்கின்ற அவ்வதிகார இனத்தையே ஒட்டுமொத்தமாக கணக்கிலெடுக்க வேண்டும்.)

''பெர்மகோ'' எனும் ஒரு பாதிரியார் புனேயிலுள்ள குருதவக் கல்லூரியில் பாடம் கற்பித்து வந்தார். ரொம்ப கெடுபிடியான ஆள். தேர்வு நேரங்களில் மாணவர்களிடம் ஈவு இரக்கம் காட்டமாட்டார் . இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார் . திருச்சவைகளுக்கு மத்தியில் ஒற்றுமை பற்றிய ஆய்வு அடங்கிய புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிட்டார். அச்சிடலாம் என புனே மறைமாவட்ட ஆயர் அப்புத்தகத்திற்கு இசைவும் கொடுத்திருந்தார். இப்புத்தகத்தின் ஒரு பகுதியில் பாப்பனவருக்கு தவறாவரம் அளிக்கும் திரு அவை சட்டங்கள் எந்த அளவுக்கு சரியான மரபு சார்ந்தது அல்லது சட்ட பூர்வமாக இயற்றப்பட்டது என்பது பற்றிய வினாக்களை அப்புத்தகத்தில் எழுப்பி இருந்தார். இவரொன்றும் இவரது தனிப்பட்ட கருத்துகளை அதில் சொல்லவில்லை. திருச்சவையின் ஆவணங்களையே இதற்கு ஆதாரமாக்கி இருந்தார்.

உரோமே வெகுண்டு எழுந்தது . எடுத்த எடுப்பிலேயே , ''இவர் இனி கற்று கொடுக்க கூடாது '' என தடை போட்டது. உசாவல் , நடுநிலை நோக்கு , நேர்மையான பார்வை, நல்லது கெட்டதுகளை ஆராய்வது , உண்மைகளை மனத் துணிவோடு ஏற்கும் பொறுப்புணர்வு திருஅவைக்கு எள்ளளவும் இருந்தது கிடையாது என்பது மீண்டும் வெட்ட வெளிச்சமாகியது. கடந்த காலங்களில் பலியாக்கப்பட்ட பல நூறு ஆட்களுள் பெர்மகொவும் ஒருவர் .

தொடரும் .....

No comments:

Post a Comment