Pages

france

Wednesday, November 10, 2010

திருகோணமலை-லிங்கபுரம் தமிழ் கிராமத்தின் சாபக்கேடு, 125 குடும்பங்களில் தலைவன்மார் இல்லை, அநேகமான ஆண்கள் இராணுவத்தால் சுட்டுக் கொலை! ( நேரடி ரிப்போர்ட்)

திருகோணமலை மாவட்டத்தில் மூதூருக்கு செல்லும் பாதையில் அமைந்திருக்கும் லிங்கபுரம் தமிழ் கிராமம். இது ஒரு பாரம்பரிய விவசாய கிராமமும்கூட. கடந்த காலங்களில் யுத்தத்தால் இடம்பெயர்ந்து சென்றிருந்த இக்கிராம மக்கள் அண்மையில்தான் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

 ஒட்டுமொத்தமாக 220 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டு இருக்கின்றன. ஆனால்  இவற்றுள் 125 குடும்பங்களில் குடும்பத் தலைவன்மார் கிடையாது. இதுவே இக்கிராமத்தை பீடித்து இருக்கும் சாபக்கேடு.  கடந்த 30 வருட கால யுத்தத்தால் அடிக்கடி திருகோணமலை மாவட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் கிராமங்களில் ஒன்றுதான் லிங்கபுரம்.

 திருகோணமலை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அடிக்கடி இக்கிராமத்தில்தான் பாதுகாப்புத் தேடி வருகின்றமையும், பதுங்குகின்றமையும் வழமையாக இருந்து வந்துள்ளது.

 இதனால் இராணுவத்தினர் இக்கிராமம் மீது ஒரு கண் வைத்திருந்தார்கள்.  வடக்கு, கிழக்கு மாகாணங்களில்  உள்ள ஏனைய தமிழ் கிராமங்களில் படையினரால் கற்பழிப்புக்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெரிதும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.

 ஆனால் இக்கிராமத்தில் படையினரால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன என்று பதிவுகள் இல்லை.  ஆனால் ஆண்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு இருக்கின்றனர்.

 இதுவும் ஒரு வகையான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் வடிவம்தான். 1990 களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் முழங்காலில் இருக்க வைக்கப்பட்டு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இன்றும் இக்கிராம மக்களைப் பொறுத்தவரை ஒரு மாறாத வடுதான்.

 125 குடும்பங்களின்  குடும்பத் தலைவன்மாரில் அநேகமானோர்  இராணுவத்தால்  சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள்.  கணவன்மார் மட்டும் அன்றி ஆண் பிள்ளைகளும் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.

 ஆனால் இவர்களில் எவருக்கும் ஆயுதக் குழுக்களுடனோ, புலிகள் இயக்கத்துடனோ எவ்விதமான சம்பந்தமும் கிடையாது.  யுத்தத்தின் ஆரம்ப வருடங்களில் இங்கு வாழ்ந்து கொண்டிருந்த  இக்கிராம மக்கள் பின் இடம்பெயர்ந்து திருகோணமலை மாவட்டத்தில் உள்ள நலன்புரி முகாம்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்து இருந்தனர்.

 சில குடும்பங்கள் உயிரைப் பணயம் வைத்து கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தப்பி சென்றுள்ளன. இன்றைய அமைதிச் சூழலில் இக்கிராமத்தில் மீண்டும் மக்கள் மீள்குடியேறி உள்ளார்கள்.

 ஆயினும் கடந்த கால கசப்பான அனுபவங்களில் இருந்து மீள முடியாமல் இருக்கின்றமையுடன் திரும்பவும் குடும்ப அங்கத்தவர்களை இழக்க வேண்டி ஏற்படுமா? என்கிற பேரச்சத்திலேயே  மூழ்கி இருக்கின்றார்கள்.  வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசினால் வழங்கப்படுகின்ற நட்டஈடுகள் இவர்களை முறையாக வந்தடையவே இல்லை.

 அரசு இவர்களுக்கு கூப்பன் முத்திரை வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் இம்மக்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய அது போதுமானதாக இல்லை. சில அரச சார்பாற்ற நிறுவனங்களின் கடைக்கண் பார்வை அவ்வப்போது இவர்கள் மீது விழுகின்றமை உண்டு.

 குடும்பத் தலைவன்மார் இல்லாமையால் வாழ்வாதாரம் என்பது கிடையாது. பெண்களே குடும்பப் பொறுப்புக்களை விரும்பியோ, விரும்பாமலோ தலையில் சுமக்க வேண்டி இருக்கின்றது.

 ஆயினும் சுயதொழில் வாய்ப்பு, வருமானம் என்பன பெரும்பாலும் அரிதாகவே கிடைக்கின்றன. வறுமை மாத்திரமே வீட்டுக்கு வீடு மிஞ்சி இருக்கின்றது. இக்கிராமத்தில் கட்டுமாணப் பணிகள் எவையும் அரசினால் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை.

 எமது அலுவலக நிருபர் ஒருவர் அண்மையில் இக்கிராமத்துக்கு சென்று இம்மக்களை நேரில் சந்தித்துப் பேட்டி கண்டார்.  அவர்களில் சிலருடைய பேட்டிகளை வாசகர்களுடன் தமிழ்.சி.என்.என் பகிர்ந்து கொள்கின்றது.

திருமதி புஸ்பாவதி (வயது 61) என்பவர் கூறியவை வருமாறு:-

”நான் பிறந்ததும்  வளர்ந்ததும் எல்லாம் இப்பகுதியில்தான். எனக்கு 19 வயதில் திருமணம் நடந்தது. என் அப்பாவோடு சேர்ந்து கணவரும் விவசாயம் செய்தார். யுத்தம் ஆரம்பித்த ஆரம்ப வருடங்களில் இங்குதான் வசித்தோம். இராணுவத்தினர் ஏராளமானோர் எமது கிராமத்துக்குள் உட்புகுந்தனர்.

 இதனால்  எம்மால் இங்கு இருக்க முடியவில்லை. வறுமையோடு, பயமும் தொடர  நாங்கள் திருகோணமலை பகுதிக்குச் சென்று விட்டோம். அகதிகளாக பல இடங்களில் அலைந்தோம். பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு திரிந்து நாங்கள் பட்டபாடுகள் ஏராளம்.

 எமது கிராமத்தில் வெடிச்சத்தங்கள் ஓரளவு  குறைந்தன போல் இருந்தது. என் கணவரும், கிராமத்தை சேர்ந்த  பல குடும்பத்து ஆண்களும் சில பொருட்களை எடுத்துச் செல்கின்றமைக்காக வீடுகளுக்கு வந்திருந்தனர். அப்போது இராணுவத்தினர் இவர்களை  பிடித்துச் சென்று விட்டனர். பிடித்துச் செல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று அறிகின்றேன். இதுவரை எந்தத் தகவலும் இல்லை.  மூன்று பிள்ளைகள். வளர்ந்து விட்டார்கள். இன்று நான் எனது சொந்த இடத்துக்கு திரும்பி வந்து விட்டேன்.

 ஆனால் என் வலியும், துயரமும் என்றென்றைக்கும் மாறாது.  மீள் குடியேற்றப்பட்டு இருக்கின்றோம். ஆனால்  எமது கிராமத்தில் 220 குடும்பங்களுக்கும்  3 கிணறுகள் மாத்திரமே உள்ளன. வருமானத்துக்கு தொழில் இல்லை.

 சில தனியார் நிறுவனங்களால் இப்பகுதி மக்களுக்கு சில சுய தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டனதான். ஆனால் எம்மைப் போன்ற எந்தவித வசதியும் அற்ற குடும்பங்களுக்கு உதவி கிடைக்கவே இல்லை. உண்மையில் ஒரு வேளை சாப்பாட்டுக்கே நாங்கள் பெரிதும் திண்டாடுகின்றோம். எமது பேரவலத்தை வெளியுலகத்துக்கு கொண்டு வாருங்கள்.


  திருமதி கலாவதி கந்தசாமி (வயது 48) என்பவர் கூறியவை வருமாறு:-

”எனக்கு ஒரே ஒரு மகள். எனது குடும்பத்துடன் இங்கு வசித்து வந்தேன். யுத்தம் என்கிற கொடூர அரக்கன் என்னை போன்ற பல பெண்களை விதவைகள் ஆக்கியது. எங்கள் குடும்பங்களின் நிலையையே மாற்றியது. எல்லா துன்பங்களையும் சுமந்தோம். இன்று மீள் குடியேற்றம் என்கிற பெயரில் எமது சொந்த இடங்களில் குடியேற்றப்பட்டுள்ளோம்.

 ஆனால்  வருமானத்துக்கு என்ன செய்யலாம்? என்கிற எந்த திட்டமிடலும் இல்லாமல் இன்னும் வறுமையோடுதான் வாழ்கிறோம். சமுர்த்தி என்கிற பெயரில் கொஞ்ச அரிசியும், சீனியும் தருகின்றார்கள்.

 அவை எமக்கு 10 நாட்களுக்கு கூட போதியனவாக இல்லை. எமக்கு அரசு எவ்விதமான  உதவியும் வழங்கவில்லை என்றே கூறலாம். வீடுகளை கூட நாங்கள்தான் திருத்தினோம்.

 திருமதி தியாகராஜா (வயது 57) என்பவர் கூறியவை வருமாறு

”எனது குடும்பத்தில் அப்பா, கணவன், மகன், கணவனின் தம்பி,  தங்கையின் மகன் என ஐந்து பேரை நாசமாகப் போனவர்கள் கொன்று விட்டார்கள்.  இன்று நான் ஒரு நடைப்பிணமாகதான் வாழ்ந்து வருகிறேன். எனது மகள்மாரை வளர்க்க ஏதோ கூலி வேலை செய்கிறேன். எனக்கு இந்த ஊரில் சொந்தமாக விவசாய காணி ஒன்று இருக்கிறது.

ஆனால் விவசாயம் செய்ய கிணறு வசதி இல்லை. தையல் தெரியும். ஆனால் தையல் இயந்திரம் இல்லை. ஒரு வருமானத்துக்கும் வழி இல்லாமல் இருக்கின்றேன்.

 எமது கண்களைக் கட்டி காட்டில் கொண்டு வந்து விட்டிருக்கின்றார்கள் என்பது போல்தான் உணர்கின்றேன். தயவு செய்து எமது துன்பத்தை வெளிக்கொண்டு வாருங்கள் .

 ”  நிருபரிடம் இம்மக்களுக்கு  போக்குவரத்து, மருத்துவ சேவைகள் என்றாலும் ஒழுங்காக வழங்கப்படுகின்றனவா? என்று தமிழ் சி.என்.என் கேட்டபோது அவர் இப்படிக் கூறினார்.

 ”இம்மக்களின் அன்றாட வாழ்கையையே ஒரு போராட்டம்தான். திருகோணமலையில் இருந்து மூதூரூக்கு காலையும, மதியமும் என இரண்டு வேளைகளுக்கான   பஸ் சேவை மாத்திரமே உள்ளது.

 அதே போல் மூதூரில் இருந்து திருகோணமலைக்கும் இரண்டு வேளைகளுக்கான   பஸ் சேவை மாத்திரமே உள்ளது. வறுமையில் இருக்கும் இம்மக்களுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் கூட திருகோணமலை வைத்தியசாலைக்கோ, மூதூர் வைத்தியசாலைக்கோதான் செல்ல வேண்டும்.

 ஆனால் போக்குவரத்து வசதிக் குறைவு  காரணமாக உரிய நேரத்தில் வைத்தியசாலைகளுக்கு சென்று சிகிச்சை பெறுகின்றமை சாத்தியம் அல்ல.

 இக்கிராமத்துக்கு பொறுப்பான  கிராம சேவையாளருக்கு ஏராளமான முறைபாடுகளை  கொடுத்துள்ளபோதிலும் எவ்விதமான பலனும் கிட்டவே இல்லை என்கின்றனர் இக்கிராம மக்கள்.”

No comments:

Post a Comment