Pages

france

Thursday, November 11, 2010

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை நோக்கித் திரும்பியுள்ள அரசின் போர் முகம்

பிரித்தானியாவில் கொன்சவேட்டிவ் கட்சி தலைமையிலான கூட்டு அரசு பதவியேற்ற பின்னர் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அண்மையில் முதன் முதலாக பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட பயணம் பெரும் தோல்வியில் முடிந்துள்ளது.
புலம்பெயர் தமிழ் மக்கள் மட்டுமல்லாது, பிரித்தானியாவைத் தளமாக கொண்ட அனைத்துலக மன்னிப்புச் சபை போன்ற அனைத்துலகத்தில் குரல் கொடுக்கவல்ல அமைப்புக்களும் ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக களமிறங்கியது பீரிஸின் பயண நோக்கத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளன.

வெளிவிவகார அமைச்சரின் பிரித்தானிய வருகையின் நோக்கம் தெளிவானது, அதாவது ஸ்ரீலங்கா அரசு அமைத்துள்ள இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் குழு தொடர்பான நல்ல அபிப்பிராயத்தைப் பிரித்தானியா அரசுக்கு ஏற்படுத்துதல், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடும் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு பயங்கரவாத முத்திரை குத்துதல் இவை இரண்டும் தான் அவரின் நோக்கமாக இருந்தது.இதன் மூலம் அனைத்துலகத்தின் அழுத்தங்களை குறிப்பாக மேற்குலகத்தின் அழுத்தங்களைக் குறைப்பதன் மூலம் ஸ்ரீலங்கா அரசுக்கு மூச்சுவிடும் கால அவகாசத்தை ஏற்படுத்த பீரிஸ் முனைந்திருந்தார்.

ஆனால் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹெக் இன் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாகவே இருந்தது. ஸ்ரீலங்காவில் உள்ள எல்லா இனங்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் எனவும் சிறீலங்கா அரசு அமைத்துள்ள இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்தும் குழு, ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழுவுடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஹெக் பீரிஸ் இடம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துலக போரியல் விதிகளின் மீறல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் காத்திரமான விசாரணைகள் மேற்கொள்ளவதுடன், ஜனநாயகம், மனித உரிமை விதிகள், பேச்சு சுதந்திரம் தொடர்பில் ஸ்ரீலங்கா  தெளிவான நடவடிக்கைகளைக் காண்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளதாக பிரித்தானியா அரசின் வெளிவிவகாரச் செயலக இணையத்தளத்தில் குறுகிய செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
அந்த செய்தியில் மேற்குறிப்பிட்ட தகவல்களை விட ஸ்ரீலங்கா அமைச்சரின் பயணம் தொடர்பில் மேலதிக முக்கியத்துவமிக்க தகவல்கள் எவையுமில்லை. பிரித்தானியாவின் இந்த நகர்வு, கடந்த வாரம் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் மேற்கொண்ட காட்டமான தீர்மானத்தை ஒட்டி அமைந்துள்ளதை நாம் காணலாம்.

ஸ்ரீலங்கா அரசு அமைத்துள்ள இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் குழுவின் விசாரணைகளில் பங்கு கொள்ளுமாறு, உலகின் பிரதான மனித உரிமை அமைப்புக்களான வொஷிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், பிரித்தானியாவை தளமாக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை, பெல்ஜியத்தை தளமாக கொண்ட அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு ஆகியவற்றிற்கு ஸ்ரீலங்கா அரசு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பின் உள்நோக்கம் தெளிவானது, அதாவது இந்த அமைப்புக்களை அழைப்பதன் மூலம் ஸ்ரீலங்கா அரசு அமைத்துள்ள குழு ஒரு அனைத்துலக தரதரத்தை கொண்டது என்ற தோற்றத்தை வெளி உலகிற்கு ஏற்படுத்த சிறீலங்கா அரசு தந்திரமாக முயன்றிருந்தது.
ஆனால் அந்த இரஜதந்திரமும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா அரசின் அழைப்பை கூட்டாக நிராகரித்துள்ள இந்த அமைப்புக்கள், சிறீலங்கா அரசு அமைத்துள்ள குழுவானது, அதிகாரங்கள் அற்றது என்பதுடன், குறைந்த அளவேனும் அனைத்துலகத்தின் தராதரத்தை கொண்டிருக்கவில்லை என அவை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளன.
இந்த இரண்டு நிகழ்வுகளும் தமிழ் மக்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசு எடுத்துவைத்துள்ள மேலதிக நகர்வுகளுக்குக் கிடைத்த பின்னடைவாகவே கருதப்பட்ட நிலையில், ஐக்கிய நாடுகள் சபையும் மேலும் ஒரு குண்டை போட்டுள்ளது.

அதாவது, ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கவென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் அமைக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட போர்க் குற்ற ஆலோசனைக்குழு தமக்கு சாட்சியங்களைச் சமர்ப்பிக்குமாறு பகிரங்க அறிவித்தலை விடுத்துள்ளது.

கடந்த 20 ஆம் திகதி அது வெளியிட்டுள்ள அறிக்கையில், சாட்சியங்களைச் சமர்ப்பிக்க விரும்புவோர், 10 பக்கங்களுக்கு மேற்படாது தமது சான்றுகளை எழுதி அனுப்ப முடியும் எனவும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அதனை மேற்கொள்ளுமாறு அது கேட்டுள்ளது.

ஐ.நாவின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு தனது பணிகளை கடந்த செப்ரம்பர் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழு விடுத்துள்ள இந்த அழைப்பின் பின்னால் பொதிந்துள்ள இராஜதந்திரம் மிகவும் காத்திரமானது.வன்னியில் நடைபெற்ற போரில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்திருந்த நிலையில், சிறீலங்கா அரசு மீது ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முன்னர் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்திருந்தன.
ஆனால் அதனை இந்தியா மற்றும் சீனாவின் உதவிகளுடன் ஸ்ரீலங்கா அரசு முறியடித்திருந்தது.

எனினும் அதனை ஒரு பரீட்சார்த்த ஆடு களமாகத் தான் மேற்குலகம் பரீட்சித்திருந்தது. அங்கு அவர்கள் கண்டுகொண்ட எதிர்ப்பு அவர்களின் அடுத்த நகர்வுக்கு வேறு வழியைக் காண்பித்துள்ளது.

எனவே தான், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச்சபை, பொதுச்சபை என்பவற்றின் வரையறைகளுக்குள் கொண்டுவரப்படாத விதிமுறைகள் மூலம் ஐக்கிய நாடுகள் சபை ஆலோசனைக்குழு என்ற ஒரு குழுவை அமைத்துக் கொண்டது.

சிலர் கேட்கலாம் ஏன் அது விசாரணைக்குழுவாக அமைக்கப்பட வில்லை என்று, விசாரணைக்குழு ஒன்றை அமைப்பதானால் அதனை பாதுகாப்புச்சபை அல்லது பொதுச்சபையின் ஊடாகவே கொண்டுவர முடியும்.
பாதுகாப்புச்சபையில் வீட்டோ அதிகாரம் உள்ள சீனா, ரஸ்யாவின் உதவியுடனும், பொதுச்சபையில் இந்தியா, சீனா, ரஸ்யா, ஈரான் போன்ற நாடுகளின் நட்பு நாடுகளின் துணையுடனும் சிறீலங்கா அரசு அதனை முறியடித்துவிடும்.

எனவே தான் இந்த வரைமுறைகளை இராஜதந்திர வழிகளில் புறம்தள்ளி ஐக்கிய நாடுகள் சபையின் குழு அமைக்கப்பட்டிருந்ததாக அவதானிகள் கருதினர். தற்போது அந்த குழு போர்க்குற்ற ஆதாரங்களையும், சாட்சியங்களையும் கோரி நிற்கின்றது.
வன்னியில் இடம்பெற்ற போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அங்கு

இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த தகுந்த ஆதாரங்களையும், சாட்சியங்களையும் வழங்கினால், அதனை பரிந்துரை செய்யும் இந்தக் குழு, ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழுவை அமைக்குமாறு பாதுகாப்புச் சபைக்கு அல்லது பொதுச்சபைக்கு அழைப்பு விடுக்கலாம்.
அனைத்துலகத்தின் தராதரத்தை கொண்ட ஒரு சுயாதீன குழு விடுக்கும் அழைப்பை பாதுகாப்புச் சபையிலும், பொதுச்சபையிலும் அங்கம் வகிக்கும் நாடுகள் புறம்தள்ள முடியாது. இது தான் தற்போது ஸ்ரீலங்கா அரசு சந்தித்துள்ள மிகப்பெரும் நெருக்கடி.

ஆனால் அதனை வலுப்படுத்த வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு ஒன்று புலம்பெயர் தமிழ் சமூகத்தின் தோள் மீது உள்ளது. அவர்கள் தான் ஆதாரங்களையும், சாட்சியங்களையும் வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இந்த நீதியின் நகர்வில் தான் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்போரின் அடுத்த நகர்வும் தங்கியுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் ஸ்ரீலங்கா அரசின் போர் முகம் புலம்பெயர் தமிழ் சமூகத்தையும், மேற்குலகத்தையும் நோக்கியதாகவே இருக்கும் என்றால் அது மிகையாகாது.

- வேல்ஸிலிருந்து அருஷ்

No comments:

Post a Comment