Pages

france

Monday, November 8, 2010

பிரித்தானிய பிரதமரின் காரியாலயம் முன்பாக நிறைவடைந்தது பேர்மிங்காம் முதல் லண்டன் வரையான "ஹாட் டு ஹாட் வோக்"

கடந்த ஏழு ஆறுநாட்களாக பிரித்தானிய தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த பேர்மிங்காம் முதல் லண்டன் வரையான போர்வீரர்களை நினைவுகூரும் "ஹாட் டு ஹாட்" நடைபயணம் நேற்று மாலை பிரித்தனிய பிரதமரின் காரியாலம் முன்பாக நிறைவடைந்தது.

இந்த நடை பயணத்தின் இறுதி நாளான நேற்று காலை 9:30 மணிக்கு St.Albans எனும் இடத்தில் அமைந்துள்ள பிரித்தானிய போர்வீரர்களை நினைவுகூறும் தூபியின் முன்பாக அகவணக்கம் செலுத்தலுடன் ஆரம்பிக்கப்பட்டது.


இந்த ஆரம்ப நிகழ்வை அப்பகுதி Deputy Mayor of St Albans councillor DERIC REED அவர்கள் ஆரம்பித்து வைத்தார். அங்கு அவர் உரையாற்றுகையில் தமிழர்களால் மேற்கொள்ளப்படும் இந்த நடைபயணம் தொடர்பாக தான் மகிழ்ச்சியடைவதாகவும், இதுபோன்ற செயற்பாடுகள் எதிர்காலத்திலும் இடம்பெற வேண்டும் என தான் விரும்புவதாகவும், இந்த நடைபயணம் தொடர்பான செய்திகளை லோக்கல் மீடியா க்களில் வெளிக்கொண்டுவர தான் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி நடைபயணத்தை மேற்கொண்ட அனைவரையும் வாழ்த்தினார்.

அது மட்டுமன்றி தமிழர்களால் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியை கெளரவப்படுத்தும் முகமாக தானும் ஆரம்ப இடத்தில் இருந்து முதல் ஒரு மைல் தூரம் அவர்களுடன் இணைந்து நடந்து சென்றிருந்தார். நிகழ்வில் பல்லின மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.


இந்த நடைபயணத்தின் ஆரம்ப நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப்பிரதமரும், மாவீரர், போராளிகள் குடும்பநலன் பேணல் அமைச்சர் திரு. உருத்திராபதி சேகர், மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் அனைத்துலக விவகார அமைச்சர் திரு. தணிகாசலம் தயாபரன் ஆகியோரும் கலந்து கொண்டதோடு தாமும் முதல் இரண்டு மைல்கள் தூரம் நடைபயணம் மேற்கொண்டவர்களுடன் இணைந்து நடந்திருந்தனர்.

சென் ஆல்பன்ஸ் இல் இருந்து ஆரம்பமான இந்த நடைபயணம் ஏ5 வீதியூடாக லண்டனை நோக்கி பயணித்தது. இந்த நடைபயணத்தின் இறுதி 10 மைல்கள் தூரம் பல தமிழ் மக்கள் தாமும் இணைந்துகொண்டு பிரதமரின் காரியாலயம் வரையான இறுதித்தூரம் வரை நடந்திருந்தனர்.


இவ்வாறு நடந்தவர்களில் குறிப்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயவாணி அச்சுதன், லலிதசொரூபினி பிரதீபராஜ், ஆகியோரும், பிரித்தானிய தமிழர் பேரவையை சேர்ந்த திரு. வாகீசன், மற்றும் 73 வயது நிரம்பிய திருமதி. சுமதி சீவரட்ணம், ஆகியோர் உட்பட பலர் இந்த நடைபயணத்தில் இறுதித்தூரம் வரை கலந்துகொண்டிருந்தனர்.

ஆரம்பநாளான (02-11-2010) செவ்வாய்க்கிழமை முதல் (07-11-2010) நேற்று மாலை வரை பேர்மிங்காம் முதல் லண்டன் வரையான முழுமையான தூரத்தினையும் நடந்து சென்றவர்களான திரு. ஜோகணேஸ், திரு. நிமலன், திரு. லோகேஸ்வரன், திரு. மொறிஸ், திரு. சிறீறஞ்சன் ஆகியோரை கெளரவப்படுத்தவும், ஊக்கம் கொடுக்கவுமே இவ்வாறான பங்களிப்பில் பலர் கலந்துகொண்டிருந்தனர். இறுதி மூன்று நாட்களாக பிரித்தானிய தமிழர் பேரவையை சேர்ந்த திரு. ஜெயா மாஸ்டர் அவர்களும் இவர்களுடன் இணைந்து லண்டன் வரை நடைபயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


நடைபயணம் மேற்கொண்ட தமிழர்களை மனமுவந்து வரவேற்கவென பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தின் முன்பாக பிரித்தானிய போர்வீரர்களுக்கு உதவும் அமைப்பின் coordinator Joanna Armanndias - H4H அவர்கள் காத்துநின்று கைகொடுத்து வரவேற்றார்.

அவர்களின் வரவேற்பை தொடர்ந்து பார்ளினெண்ட் ஸ்றீட் இல் உள்ள போர்வீரர்கள் நினைவுத்தூபி முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தலுடன் நிறைவு பெற்றது.

நிறைவு நிகழ்வில் நடைபயணம் மேற்கொண்டவர்களால் மனு ஒன்றும் பிரதமரின் காரியாலயத்தில் மாலை 6:00 மணிக்கு கையளிக்கப்பட்டது. மனு கையளித்த பின் பார்ளினெண்ட் ஸ்றீட் இல் கூடியிருந்த மக்கள் மத்தியில் இந்த நடைபயணத்தின் ஏற்பாட்டாளரான திரு. ஜோகணேஸ் அவர்கள் இந்த நடைபயணம் தொடர்பாகவும், தாம் பிரதமரிடம் கையளித்த மனு தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

அத்தோடு இந்த நடைபயணத்தி பங்கு கொண்டவர்கள், மற்றும் உதவிகள் செய்தவர்கள் உட்பட அங்கு கூடிய மக்களுக்கும், தமது நடைபயணம் தொடர்பாக மக்கள் மத்தியில் செய்திகளை கொண்டுசென்ற ஊடகங்களுக்கும் தனதும், தனது குழு சார்ந்தும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

அங்கு கூடிய மகளின் வாழ்த்துக்களைத் தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றது.

No comments:

Post a Comment