விக்கிலீக்குக்கும், விடுதலைப் புலிகளுக்கும் என்ன தொடர்பு என்பதை பின்னால் பார்ப்போம்.
முதலில், விடுதலைப் புலிகள் மீதான தடை, கருணாநிதி அரசின் நிலைபாடு ஆகியவற்றை பார்த்து விடுவோம்.சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் புலிகள் இயக்கத்தின் மீதான தடைக்கு போதுமான காரணங்கள் உள்ளனவா என்று ஆராயத் தொடங்கியபோதே, இது ஒரு சடங்கு என்பது புரிந்து விட்டது.   ஏனெனில், புலிகள் இயக்கத்தை தடை செய்து வெளியிடப்பட்ட அறிவிக்கையிலேயே, புலிகள் இயக்கம் பெரும்பாலும் அழிந்து விட்டது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்தச் சூழலில் தடை எதற்கு என்ற கேள்வி எழுகிறது. ஆனாலும், விடாப் பிடியாக இந்தத் தடையை நியாயம் என்று நிலை நிறுத்த, கருணாநிதி அரசு முயற்சி செய்ததை இந்தத் தீர்ப்பாய விசாரணையில் காண முடிந்தது.

மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை முழுவதும், மாநில அரசு வழங்கிய ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்கள் அடிப்படையிலேயே வெளியிடப் பட்டது என்பது தீர்ப்பாய விசாரணையில் தெளிவாகத் தெரிந்தது.

இயக்கம் ஏறக்குறைய அழிந்து விட்டது என்ற நிலையில், இந்த இயக்கத்தை தடை செய்ய வேண்டுமா இல்லையா என்று ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டிய ஒரு தீர்ப்பாயம், நியாயமாக செய்ய வேண்டியது, அந்த இயக்கத்தின் ஆதரவாளர்களை அனுமதிப்பது தானே ?

புலிகள் இயக்கத்தை ஆதரித்த ஒரே காரணத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட வைகோ தன்னை இந்த விசாரணையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அளித்த மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது எந்த அடிப்படையில் ?

அடுத்து விசாரணைக்கு வந்த, பழ.நெடுமாறனையும், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தையும் சட்டத்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினர்கள் மட்டுமே விசாரணையில் பங்கு கொள்ள இயலும் என்ற காரணத்தை சொல்லி நிராகரித்தது தீர்ப்பாயம். தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் மனுவை நிராகரித்தது, அது ஒரு பதிவு செய்யப்படாத அமைப்பு என்பதனால்.

அடுத்து சிறைக் கைதிகள் உரிமை மையம் என்ற பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்புன் சார்பாக, ஈழத் தமிழர்களுக்காக அந்த அமைப்பு தொடர்ந்த வழக்குகள், பொது நல வழக்குகள், முகாமில் உள்ள தமிழருக்காக இந்த அமைப்பு எடுத்த நடவடிக்கைகள் ஆகிய அனைத்தையும் பட்டியலிட்டு, தீர்ப்பாயத்தின் முன்பு மனுவாக சமர்ப்பித்த போது, வேறு வழியின்றி அதை ஏற்றுக் கொண்டார், தீர்ப்பாயத்தின் தலைவரும், புது தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியும் ஆன விக்ரம்ஜித் சென்.

இந்த விவகாரத்தில் கருணாநிதி அரசு எடுத்த நிலைப்பாட்டைத் தான் கவனித்துப் பார்க்க வேண்டும்.புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச் செல்வன் இறந்த போது, தமிழக அரசின் செய்திப் பிரிவு வழியாக, முதலமைச்சர் என்ற வகையில் கருணாநிதி எழுதி வெளியிட்ட இரங்கல் கவிதை.

எப்போதும் சிரித்திடும் முகம் எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை, இளமை, இதயமோ; இமயத்தின் வலிமை, வலிமை!

கிழச் சிங்கம் பால சிங்கம் வழியில் பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி!

உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய உத்தம வாலிபன் – உயிரனையான் – உடன்பிறப்பனையான்;

தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம் தன்புகழ் செதுக்கிய செல்வா; எங்கு சென்றாய்?”

20 ஏப்ரல் 2009 அன்று என்டிடிவி தொலைக்காட்சி ஊடகத்திற்கு கருணாநிதி அளித்த பேட்டி.

பிரபாகரன் எனது நண்பர். நான் தீவிரவாதி அல்ல.   பிரபாகரனை நான் தீவிரவாதியாக பார்க்கவில்லை.   ஆனால், அவர் இயக்கத்தில் தீவிரவாதம் நுழைந்து விட்டது. தனி ஈழம் காண வேண்டும் என்ற பிரபாகரனின் கோரிக்கை நியாயமானது. ஆனால் அதற்காக அவர் கையாண்ட வழி முறைகள் சரியானவையாக இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால், பிரபாகரனுக்கு தெரியாமலேயே அவர் இயக்கத்திற்குள் தீவிரவாதம் நுழைந்து விட்டது.


இது எப்படி இருக்கிறது என்றால், இரண்டு மனைவிகள் இருப்பவர்கள் முதலமைச்சராக இருக்க முடியாது என்று ஒரு சட்டம் வந்து, அது தொடர்பாக ஒரு விசாரணை நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த விசாரணையில் கனிமொழி யார் என்று கேட்டால் கருணாநிதி என்ன கூறுவார் தெரியுமா ?

அவர் ராசாத்தி அம்மாளின் அருந்தவப் புதல்வி.   ராசாத்தி அம்மாள் காகிதப் பூ நாடகத்திலே கதாநாயகியாக நடித்தவர். அந்த நாடகத்திற்கு நான் தான் வசனம் எழுதினேன்.     நான் வசனம் எழுதியதாலேயே, ராசாத்தி அம்மாள் எனக்கு ரசிகை ஆகக்   கூடாதா ?   அவர் ரசிகை ஆனதால் காகிதப் பூ நாடகத்தில் அவர் கதாநாயகி இல்லை என்று ஆகி விடுமா ? அல்லது கனிமொழி தான் அவர் மகள் இல்லை என்று ஆகி விடுமா ? அவருக்கே கனிமொழி மகளாக இருக்கும் போது, எனக்கு மகளாகக் கூடாதா ? அவர் மகளாகும் போது, நான் மட்டும் அவருக்கு தந்தையாக ஆக முடியாதா ? வையகம் குறை கூறுமா ?

ஏதாவது புரிகிறதா ?   இதுதான் கருணாநிதி.   இப்போது இந்தக் கருணாநிதி அரசு, தீர்ப்பாயத்தில் எடுத்த நிலைப்பாடுகளை பார்ப்போம்.

தமிழக அரசின் க்யூ பிரிவின் சார்பாக, அசோக் குமார் என்ற எஸ்.பி. முதல் சாட்சி.   விசாரணையின் போதே, புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிக்க வேண்டும் என்று எதன் அடிப்படையில் முடிவெடுத்தீர்கள் என்ற கேள்விக்கே உளறு உளறு என்று உளறினார்.   அவரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதித்தால், ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்று, நீதிபதி அவரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வில்லை.

அடுத்த சாட்சி, மத்திய அரசின் உள்துறை இயக்குநர் பி.கே.மிஷ்ரா. அவர் தனது சாட்சியத்தின் போது, தங்களுக்கு அனைத்து ஆதாரங்களையும் வழங்கியது, தமிழக காவல் துறைதான் என்றும், புலம் பெயர்ந்த ஈழ அரசாங்கம் அமைக்கப் பட்டிருக்கிறது என்றும், அதனால் இந்தியாவுக்கு ஆபத்து என்றும் கூறினார்.

அடுத்து க்யூ பிரிவைச் சேர்ந்த ஐந்து புலனாய்வு அதிகாரிகள் விசாரிக்கப் பட்டார்கள்.   இவர்கள் ஐந்து பேரும், 2008 மற்றும் 2009 ஆண்டுகளில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப் பட்டவர்கள் மீது பதியப் பட்ட வழக்குகளைப் பற்றி கூறினார்கள்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்ற கூறுகிறது தெரியுமா ?

இந்தியாவின் இறையாண்மைக்கும், பிரதேச ஒருமைப்பாட்டிற்கும், குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் இயக்கம், சட்ட விரோத இயக்கமாக கருதப் படும் என்று கூறுகிறது.

புலிகள் இயக்கத்தின் நோக்கம், சுதந்திர ஈழம் அமைப்பதுதான் என்று அனைவருக்கும் தெரியும்.   தேசியத் தலைவரின் பல்வேறு மாவீரர் நாள் உரைகளில், இந்தியாவை நேச நாடாகத் தான் பார்க்கிறோம் என்று கூறியிருக்கிறார். மேலும், புலிகள் இயக்கத்தின் நோக்கம், இந்தியாவின் ஒரு பகுதியை கவர்வது என்றால், இந்தியா எண்பதுகளில், புலிகள் இயக்கத்திற்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்து உதவியிருக்குமா ? திம்பு பேச்சுவார்த்தை முதல், இந்திய அமைதிப் படை நடத்திய பேச்சுவார்த்தைகள் வரை, புலிகள் இயக்கத்தை சரிசமமாக நடத்தி இந்தியா பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்குமா ?

இந்தியாவின் ஆக்ரமிப்பிலிருந்து அஸ்ஸாமிற்கு விடுதலை என்ற நோக்கத்தோடு தொடங்கப் பட்ட, போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணியோடு, 24 மே 2005ல், இந்திய அரசாங்கம் ஒப்பந்தம் செய்து கொள்ள வில்லையா ?

இதே நோக்கத்திற்காக பாடுபடும் மற்றொரு இயக்கமான போடோ விடுதலைப் புலிகள் படையோடு, இந்திய அரசாங்கம் 2003ல் ஒப்பந்தம் செய்து கொள்ள வில்லையா ?
இந்தியாவிலிருந்து விடுதலை என்று துவங்கப் பட்ட நாகாலாந்து பொதுவுடமைக் கவுன்சிலோடு, 1975ல் ஷில்லாங் ஒப்பந்தம் போடவில்லையா இந்தியா ?

இந்தியாவிலிருந்து ஒரு பகுதியை பிரிப்பதே எங்கள் நோக்கம் என்று அறிவிக்கும் அமைப்புகளோடெல்லாம் பேச்சு வார்த்தை நடத்துவார்களாம்….   இந்தியாவின் எந்த பகுதியையும் இணைக்கும் திட்டம் சிறிதும் இல்லாத, தனி ஈழம் அமைப்பதே எங்கள் லட்சியம் என்று அறிவிக்கும், ஒரு அமைப்பை தடை செய்வார்களாம். எப்படி இருக்கிறது இவர்கள் நியாயம் ?

ஆக அடிப்படை எதுவுமே இல்லாமல் ஒரு தடையை விதித்து, அந்த தடையையும் நியாயப் படுத்தும் மத்திய மாநில அரசுகளின் விநோதப் போக்கை பார்த்தீர்களா ?

இந்நிலையில், புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களை அனுமதிக்க முடியாது என்ற முடிவெடுத்ததால், புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், தீர்ப்பாயத்தின் முன்பு ஆஜராக ஒரு மனுவை தனது வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் மூலமாக தாக்கல் செய்தார். அந்த மனுவோடு, இந்த தீர்ப்பாயத்தில் அரசு சார்பாக தாக்கல் செய்யப் பட்ட ஆவணங்கள் அனைத்தின் நகலும் வேண்டும் என்றும் ஒரு மனு தாக்கல் செய்யப் பட்டது.

நீதிபதி விக்ரம்ஜித் சென், இந்த இரண்டு மனுக்களையும் நிராகரித்து, புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை மட்டும் தான் அனுமதிக்க முடியும், முன்னாள் உறுப்பினர்களை அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டார்.

ஒரு இயக்கம் அழிந்து விட்டது என்று அறிவிப்பார்களாம். அந்த இயக்கத்தை தடை செய்வார்களாம். அதற்கு சம்பிரதாயமாக ஒரு தீர்ப்பாயம் நடத்துவார்களாம். அந்தத் தீர்ப்பாயத்தில், ஆதரவாளர்களை அனுமதிக்க மாட்டார்களாம், முன்னாள் உறுப்பினர்களையும் அனுமதிக்க மாட்டார்களாம். இதற்கு, ஒரு பூட்டிய அறையில், அரசுத் தரப்பும், தீர்ப்பாயத்தின் தலைவர்களும் கொலை கொலையா முந்திரிக்கா விளையாடி விட்டு, வெளியே வந்து விசாரணை முடிந்து விட்டது என்று அறிவித்திருக்கலாமே ?

எதற்காக அனைத்துத் தரப்புக்கும் வாய்ப்பு வழங்குவது போல, இந்த நாடகம் ?

புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரை அனுமதிக்க மறுத்து, தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது.   இந்த வழக்கு திங்களன்று, விசாரணைக்கு வருகிறது.   (நாங்களும் விடமாட்டோமுல்ல… …. …)

இந்த விசாரணைகளை அடுத்து புது தில்லியில் இறுதிக் கட்ட வாதங்கள் நடந்தன.   மத்திய அரசின் வழக்கறிஞர் சாந்திஹோக், தனது வாதத்தில் முக்கியமாக கூறியது, கொளத்தூர் மணி பேசிய பேச்சுக்களும், சீமானின் பேச்சுக்களும்.   பேச்சுக்கள் தொடர்பாக, உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும், பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன.   அந்தத் தீர்ப்புகளில் பேச்சு என்பது, இந்திய அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை.   அதே நேரத்தில் நியாயமான கட்டுப் பாடுகளை விதிக்கலாம். ஆனால், ஒரு தடை செய்யப் பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசுவது, இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் அடங்காது. இது போல தடை செய்யப் பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகப் பேசுவதைக் கூட தடை செய்வதென்பது, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடைப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று தீர்ப்பளித்துள்ளது.

சரி. புலிகள் இயக்கம் கடந்த 19 ஆண்டுகளாக இந்தியாவில் ஈடுபட்டுள்ள வன்முறைச் சம்பவங்களை கூறச் சொல்லுங்கள்…. ஆயுதங்களோடு சர்வதேச எல்லையில் சென்ற புலிகளின் படகுகளை இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படை மடக்கி அழைத்து வந்த போது கூட, இந்தியப் படைகளின் மீது தாக்குதல் நடத்தப் படவில்லை தெரியுமா ? படகு முழுக்க ஆர்டிஎக்ஸ் வெடி மருந்துகள் இருந்த போதும், ஆயுதங்கள் இருந்த போதும், தாக்குதல் நடத்தப் படவில்லை.

இந்தியாவில் எந்த வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபடாத ஒரு இயக்கத்தை தடை செய்வது எந்த வகையில் நியாயமாகும். ஆனால் இந்த நியாயமற்ற தடையை நியாயப் படுத்தி மத்திய அரசு வழக்கறிஞர் பேசினார்.

மாநில அரசின் வழக்கறிஞர் தனஞ்செயன் பேசிய போது, புலிகள் இயக்கம் தடை செய்யப் பட்டாலும், புலிகளின் நடவடிக்கைகள் நிற்கவே இல்லை என்று குறிப்பிட்டார்.   அப்போது, நகைச்சுவையாக குறிப்பிட்ட நீதிபதி பேசாமல் தடையை நீக்கி விடுங்கள் அப்போது நடவடிக்கைகள் நிற்கிறதா என்று குறிப்பிட்டார்.

மாநில அரசு வழக்கறிஞரும், கொளத்தூர் மணி மற்றும் சீமானின் புலி ஆதரவு பேச்சுக்களை புலிகள் இயக்கத்தை தடை செய்வதற்கான காரணங்களாக குறிப்பிட்டார்.


புலிகளுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியது குற்றமென்றால், கவிதை எழுதுவது அதை விட பெரிய குற்றமல்லவா ?   புலிகள் இயக்கத்தின் தலைவர் தீவிரவாதி அல்ல என்பது அதை விட பெரிய குற்றம் அல்லவா ?   கொளத்தூர் மணியும், சீமானும் கைது செய்யப் படவேண்டியவர்கள் என்றால், கருணாநிதி மீது அல்லவா பத்து தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய வேண்டும்.. … ?

ஆனால் கருணாநிதி சீமானையும், கொளத்தூர் மணியையும் கைது செய்ய உத்தரவிடும் நிலையில் உள்ளது காலத்தின் கோலமே… ….

ஈழத் தமிழர்களின் படுகொலையை மவுனச் சாமியாராக இருந்து வேடிக்கை பார்த்த குற்றத்திற்காகவே, கருணாநிதி தமிழினத் துரோகியாக வரலாற்றில் குறிப்பிடப் படுவார்.   ஈழத் தமிழர்களும், தன்னை தமிழன் என்று கருதும் ஒவ்வொருவனும், கருணாநிதியை மன்னிக்கவே மாட்டான்.

இப்போது தலைப்புக்கு வருவோம்.   இந்த தீர்ப்பாயத்தின் விசாரணை டெல்லியில் நடைபெற்ற போது, மத்திய அரசின் சார்பாக ஒரு ரகசிய ஆவணம், நீதிபதியின் பார்வைக்கு மட்டும் சமர்ப்பிக்கப் பட்டது. அந்த ஆவணத்தை பார்வையிட்ட நீதிபதி, இந்த ஆவணத்தில் என்ன ரகசியம் இருக்கிறது…. ? எதற்காக இந்த ஆவணத்தை ரகசியம் என்று கூறுகிறீர்கள்… ?   இதில் ஒரு ரகசியமும் இல்லையே…   என்று சராமாரிக் கேள்விகள் எழுப்பினார். மத்திய அரசு வழக்கறிஞர் இல்லை இது ரகசிய ஆவணம் தான்…. என்று பதில் கூறினார். அது என்ன ஆவணம் தெரியுமா …. ?

சர்வதேச தமிழ் ஈழம் அமைத்தது தொடர்பாக இணையத்தில் வெளி வந்த தகவல்களையெல்லாம் தொகுத்து வழங்கியுள்ளார்கள். (இது மாதிரி ஆயிரம் ஆவணத்தை சவுக்கு ரெடி பண்ணும். சவுக்குக்கு தெரிந்த அளவு கூட, மத்திய உள்துறைக்கு ரகசியங்கள் ஏதும் தெரியவில்லை)   நீதிபதி விக்ரம்ஜித் சென், மேலும், மத்திய உள்துறை அதிகாரியைப் பார்த்து, நீங்கள் இந்த ஆவணத்தை பார்த்தீர்களா … இதில் என்ன இருக்கிறது…. ஒருவர் பெயரும் குறிப்பிடப் படவில்லை. இதை வெளியிடுவதால் யாருக்கு என்ன ஆபத்து ஏற்படப் போகிறது…   ஒரு ஜனநாயக நாட்டில் விதிவிலக்கான விஷயங்கள் மட்டுமே ரகசியமாகக் கருத வேண்டும். சகட்டு மேனிக்கு நீங்கள் அனைத்தையும் ரகசியம் என்று சீலிட முடியாது…   விக்கி லீக் என்று ஏதே ரகசியங்களை வெளியிடும் வெப்சைட் இருக்கிறதாமே…. அது போல, இந்த தீர்ப்பாயத்தின் ரகசியங்கள் வெளியிடப் படுவதை நான் விரும்பவில்லை. இந்தாருங்கள் இந்த ஆவணத்தை வைத்துக் கொள்ளுங்கள்.   இது ரகசியமா என்பதை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கூறினார். (தலைப்பு பொருத்தமா வந்துடுச்சா…. ?)
நன்றி சவுக்கு