கொட்டும் மழைக்கு மத்தியில் மெனிக்பாம் மக்களில் ஒரு தொகுதியினர் வலுக்கட்டாயமாக நேற்று இடமாற்றம்
வவுனியா "மெனிக்பாம்” முகாம் வலயம் 4இல் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கி இருந்த மக்களில் ஒரு தொகுதியினர் நேற்றுக் கொட்டும் மழைக்கு மத்தியில் வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றிக் கதிர்காமர் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
வலயம் 4இல் உள்ள 35 நிலையங்களில் 3 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். அவர்கள் ஓரளவு அடிப்படை வசதிகளுடன் தற்போது அங்கு வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் அவர்களை அங்கிருந்து கதிர்காமர் முகாமுக்குச் செல்லுமாறு அரச தரப்பும் படைத் தரப்பும் கோரி வந்தன.
கதிர்காமர் முகாம் வசதி குறைந்தது எனத் தெரிவித்து, அங்கு செல்வதற்கு மக்கள் மறுப்புத் தெரிவித்து வந்தனர். தங்களைச் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துமாறும் அந்த மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், நேற்று அங்கு சென்ற வவுனியா அரச அதிபர், படைத் தளபதி ஆகியோர் தனித் தனியாகக் கூட்டங்களை நடத்தி உடனடியாக (நேற்றே) மக்கள் அனைவரும் கதிர்காமர் முகாமுக் குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதைக் கேட்டு அழுது குளறிய மக்கள், வசதி குறைந்த கதிர்காமர் முகாமுக்குத் தங்களை அனுப்ப வேண்டாம் என்று அரச அதிபரிடமும் படைத் தளபதியிடமும் மன்றாடினார்கள்.
கடந்த வாரம் அங்கு வந்த மீள்குடியமர்வுப் பிரதி அமைச்சர் கருணாவிடமும்் தாம் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தனர் என்று முகாம்வாசிகள் தெரிவித்தனர்.
ஆனால், மக்களின் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டன. பொலிஸாரும் படையினரும் பஸ்களைக் கொண்டு வந்து கொட்டும் மழைக்கு மத்தியில் மக்களைப் பலவந்தமாக ஏற்றிச் சென்றனர். "மெனிக் பாம்” முகாமின் இரு பிரிவுகளில் இருந்த மக்கள் இவ்வாறு நேற்றுக் கொண்டு செல்லப்பட்டனர்.
எ
ஞ்சியுள்ள நான்கு பிரிவுகளில் உள்ளவர்களையும் இன்று கதிர்காமர் முகாமுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது முழுப் பொருள்களையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று முகாம் மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment