October 21, 2010

தாம் நேரடியாகப் பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்ட வகையில், போர் முடிவடைந்த போதும் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்று நேற்று யாழ்ப்பாணம் வந்த ஐரோப்பியப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அரச அதிபர் உள்ளிட்ட யாழ். சிவில் நிர்வாகப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசிய போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். பொதுநலவாய நாடாளுமன்ற சம்மேளனம்மற்றும் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
பிரிட்டிஷ் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் போல் மேர்பி இக் குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.
இந்தக் குழுவினர் நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்து நிலைமைகளைப் நேரில் பார்வையிட்டனர். யாழ். அரச செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் யாழ். சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினர்.
ஐரோப்பியப் பிரதிநிதிகளை வரவேற்ற அரச அதிபர், யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி விளக்கினார். தொடர்ந்து சிவில் சமூக பிரதிநிதிகளுடன் திறந்த கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
நிலைமைகளின் முன்னேற்றம் பற்றிக் கலந்துரையாடப்பட்ட போது, தற்போதைய நிலைமையில் தமக்குத் திருப்தி இல்லை என்று ஐரோப்பியக் குழுவினர் தெரிவித்தனர். போர் முடிவடைந்து விட்டாலும் பொது மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
தமது கூற்றுத் தொடர்பில் சிவில் சமூகப் பிரதிநிகளின் கருத்துக்களையும் அவர்கள் கேட்டறிந்தனர். “”போர் முடிவடைந்தமை மகிழ்ச்சியானதுதான். ஆனால், இன்றைய நிலை தொடர்ந்தால் திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட வன்முறை தோன்றாவிட்டாலும் சிறியளவிலான வன்முறைகள் ஏற்படுவதற்கான வாய்புகள் உருவாகிவிடும்” என சிவில் சமூகப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
போர் முடிவடைந்த சூழலில்கூட மக்களால் சுதந்திரமாக நடமாடுவதற்கோ, சுதந்திரமாகப் பேசவோ முடியாத நிலையே காணப்படுகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம் என்பன தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதே இதற்குக் காரணம். இவற்றை நீக்கினால் மட்டுமே முழுமையான சுதந்திரம் கிடைக்கும்” என்றும் ஐரோப்பியப் பிரதிநிதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
Written by Thurai
No comments:
Post a Comment