
காத்திரடா கண்ணா
ஞாலத்தை ஆளும் நாள்வரும் நம்பி
பாத்திரடா கண்ணா
கோலத்தைஎண்ணி கூனிக்குறுங்கி
கொள்ளுதலோ கண்ணா
வேலதை தூக்கி விடியலை நோக்கி
விரைந்திட வேணுமடா
பாலதை வெள்ளை பார்த்தவர் சொல்வார்
பாரினில் உண்மையடா
நீலத்தை கொண்டோர் வானத்தின் நிறமும்
நீளுமடா கண்ணா
சாலத்தைகூறி சுற்றிவிட்டார் இரு
காதினில் பூக்கண்ணா
பாலதுநீலம் பச்சையில் வானம்
பேசினர் பொய்கண்ணா
சாத்திரம் வேண்டாம் சங்கதிகேளு
சாதிக்கத் தோன்றியவர்
காத்திருமீண்டும் காற்றினில்வந்து
காவல் புரிந்திடுவார்
பாத்திரு காலம் பழமெனஆகும்
பறித்திடலாம் கண்ணா
பூத்திடும்மீண்டும் கார்த்திகைப்பூக்கள்
பொய்யில்லை பார்கண்ணா
ஆத்திரம் எல்லாம் ஆழஎழுந்து
ஆட்டி உலுப்பி விடும்
காத்துப்புயல் என காட்சிகள்மாறி
கயவனை தூக்கிவிடும்
நாத்தினை நட்டு பாத்துவளைர்த்த
போதிமரங் களெல்லாம்
சேர்த்துபிடுங்கி செண்பகம் வாழும்
வாகைதனை நடலாம்
வீட்டினுள்வந்து வீற்றிருக்கும் பல
போதனை சாமிகளை
நாட்டினைவிட்டு நடஎனக்கூறி
நம்மவர் வாழ்ந்திடணும்
காட்டினில்வாழும் கொடியவிலங்கில்
காட்டிய காருணியம்
நாட்டை இழந்திட வைத்ததன்றி அதை
நாமும் அறிந்திடணும்
போட்டு முழக்கு பேய்கள்எழுந்து
பிடரியில் குதிபடிய
ஓட்டமெடுத் திட ஓங்கியடித்திடு
உன்னடி வென்றிடணும்
ஆட்ட மெடுத்திட வேளைவருகுது
ஆட்சிகள் மாறிடணும்
கூட்டியே கால்களிரண்டும் இழுத்திடு
குப்புற பகைவிழணும்
ஆவிபிடித்தொரு பேயென ஓடுது
அங்கொரு தாவணியை
கூவி அடித்தொரு குழைகொடுத்தேமலை
ஏற விரட்டிடணும்
ஏவியனுப்பிய தூதுவ ரெல்லாம்
இல்லம் அனுப்பிடணும்
சீவிமுடித் தொரு செந்தமிழீழம்
சீக்கிரம் கண்டிடணும்
கிரிகாசன்
No comments:
Post a Comment